Kandha Kottai – Masala Entertainer
Movie : Kandha Kottai
Cast : Nakul, Poorna, Sandhanam, Sampathkumar
Direction : S. Sakthivel
Music : Dheena
காதல் என்றாலே கொல்லன் பட்டறை நெருப்பாய் கொதிக்கும் குணமுடைய நாயகன் நகுல். காதலர்களை சேர்த்துவைப்பதையே சேவையாக நினைக்கும் நாயகி பூர்ணா. எதிர் எதிர் துருவங்களான இருவரும் சந்தித்துக் கொள்வதும் காதலர்களாக மாறுவதும்தானே தமிழ் சினிமா. கந்தக் கோட்டையும் தமிழ் சினிமாதான்! அவர்கள் காதலுக்கு ஏற்படும் தடையும் அதை எதிர்கொண்டு வெல்வதும்தான் கதை!
மொட்டை மாடியில் தனியாக நிற்கும் தங்கை காதலனை நினைத்துக் கொண்டுதான் நிற்கிறாளோ என்று சந்தேகப்படும் அளவுக்கு காதல் எதிர்ப்பு தீவிரவாதியாக இருக்கும் நகுல், காதலை எதிர்க்கச் சொல்லும் காரணம் படு சப்பையாக இருக்கிறது. காதல் மணம் செய்துகொண்ட அப்பாவும் அம்மாவும் சண்டை போடுகிறார்களாம்… அதனால், காதல் பொய்யாம்! அவர்கள் போடும் சண்டை சீரியல் பார்ப்பதற்கும் காய்கறி வாங்குவதற்கும்தான்! அழுத்தம் இல்லாத இந்த ஆரம்பமே சறுக்கலாக இருக்கிறது.
நகுல் கொஞ்சம் விளையாட்டுப் பிள்ளையாக இருக்கிறார். உணர்ச்சிவசப்பட்டு நடிக்க வேண்டிய காட்சிகள் ஏதும் இல்லை என்பதால் பார்ட்டி எஸ்கேப். சண்டையிலும் நடனங்களிலும் அட்டகாசமாக ஸ்கோர் பண்ணுகிறார். கொஞ்சம் எக்ஸ்பிரஷனுக்கும் இடம் ஒதுக்கி கற்றுக் கொண்டால் நல்ல இடம் காத்திருக்கிறது நகுலுக்கு!
காதல் ஆதரவாளராக வரும் பூர்ணா பளிச் பெண்ணாக பச்சக் என்று ஒட்டிக் கொள்கிறார். சில இடங்களில் நடிக்கவும் செய்கிறார்.
இருவர் கேரக்டரையும் சொல்வதற்காக முதல் இருபது நிமிடங்கள் வேறுவேறு காதல்களைக் காட்டி பொறுமையை சோதித்து நம்மையே நகுல் பக்கம் நகர்த்திக் கொண்டுபோய்விடுகிறார்கள். நமக்கே காதல் மீது எரிச்சல் வந்துவிடுகிறது. நல்லவேளையாக அந்த காதல் எதிர்ப்பு ஆதரவு எபிசோடைச் சீக்கிரமே முடித்துக் கொண்டு நகுலுக்கு பூர்ணா மீது காதலை ஏற்படுத்திவிடுகிறார்.
நகுலின் நண்பராக சந்தானம். கவுண்டமணியின் வாரிசு என்று சொல்லும் அளவுக்கு இரைச்சலான வசனங்களும் எல்லோரையும் ஏக வசனத்தில் திட்டுபவராகவும் வந்து கொண்டிருந்த சந்தானம் இதில் மறுபடியும் அநியாயத்துக்கு டபுள் மீனிங்கில் பேசும் டிராக்குக்குள் போய்விட்டார். அவர் கனவில் காதலைச் சொல்லும் காட்சி மட்டும் ரசம்… மற்றதெல்லாம் விரசம்!
எஸ். சக்திவேலின் இயக்கத்தில் முதல் பாதி எந்தச் சிக்கலும் திருப்பமும் சுவாரஸ்யமும் இல்லாமல் நகர்கிறது. இடைவேளைக்குப் பிறகு வரும் திருப்பம் உண்மையிலேயே எதிர்பாராதது. வில்லனின் மகனுக்கும் பூர்ணா மீது காதல் இருப்பதும், அந்தக் காதல் நிறைவேறவில்லை என்றதும் தற்கொலை செய்து கொள்வதும் அதையடுத்து வில்லன் ஆவேசமாக பூர்ணாவைப் பழிவாங்கத் துடிப்பதுமாக டிராக் மாற்றியிருக்கிறார். ஆனால், கமுக்கமாகக் கூட்டிக் கொண்டுபோய் கல்யாணம் பண்ணாமல் அங்கேயே இருந்து கொண்டு வில்லனுக்கு சவால் விடுவது நகுலுக்கு மிஞ்சிய ஹீரோயிசம்!
சிவாஜி படம் பார்க்கும் தியேட்டரில் இருந்துகொண்டு சவால் விடுவதும், அமைச்சரின் பையனைச் சிக்கவைப்பதும் அட போடவைக்கும் காட்சிகள். ஹீரோயிசத்துக்குத் தீனி போடுவதற்காக வில்லனை ரத்தக் காட்டேரியாகச் சித்தரிக்கும் போக்கு எப்போது முடிவுக்கு வருமோ தெரியவில்லை.
இசை தினா. ஓரிரு பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன. பின்னணி இசையில் சத்தம் அதிகம்.
கந்த கோட்டை, ஓட்டைகளை அடைத்து கொஞ்சம் கூடுதலாக உழைத்திருந்தால் ஆகியிருக்கும் கமர்ஷியல் கோட்டை..!
Rating – 4.2 / 10
pondamona padamala ithu kuna kottai
pannadias review ella anna rating 4/5
boss review enge?