நடிகர்கள்: ஷம்மு, பொன்வண்ணன், ரவிமரியா, ஹரீஷ், அலெக்ஸ், கோபால், லோகேஷ்
இசை: குரு கிரண்
இயக்கம்: நந்தா பெரியசாமி
தயாரிப்பு: பிஎஸ் சேகர் ரெட்டி
‘மதுரைப் பக்கம் கொஞ்ச நாளைக்கு சினிமா எடுக்கத் தடை… அதிலும் நாலு பசங்க ஒரு பொண்ணு ஃபார்முலான்னா அந்தக் படக் குழுவுக்கே ஆயுள்காலத் தடை’ன்னு ஒரு அறிவிப்பு வைத்தால் தேவலை என்று சொல்லும் அளவுக்கு வெறுப்பேற்றுகிற ஒரு படம், மாத்தி யோசி!
‘ஆதிக்க சாதி வெறியர்களால் விரட்டப்படும் நான்கு இளைஞர்கள்…’ என்ற ஒரு வரியை வைத்துக் கொண்டு சிலம்பம் விளையாடியிருக்க வேண்டிய இயக்குநர், நொண்டியடித்து மக்கிப்போன குப்பையில் குப்புற விழுந்திருக்கிறார்.
மாங்கா, ஓணான், பாண்டி, மாரி… இதுதான் நாயகர்களின் பெயர்கள்… டவுசரைத் தவிர வேறெந்த உடையும் பிடிக்காது… (‘டைரடக்டர்’ ரொம்ப மாத்தி யோசிக்காம நிறுத்திக்கிட்டார் போல…இல்லையென்றால் அந்த டவுசரையும் விட்டு வைத்திருக்க மாட்டார்!)
கிராமத்திலிருந்து தப்பித்து சென்னைக்குப் போகிறார்கள்… (இதுக்கு இணையா ஒருத்தராலும் மாத்தி யோசிக்கவே முடியாது!)
அங்கே ஒரு வேலையும் கிடைக்கவில்லை. அதனால் ஃபுல்டைம் சில்லறைத் திருட்டில் இறங்குகிறார்கள்… (என்னா ஒரு மாத்து யோசனை?)
அப்போதுதான் ஹீரோயின் அறிமுகமாகிறார்… அவளை விற்கத் துடிக்கும் தாய்மாமனிடமிருந்து காப்பாற்றுகிறார்கள்… (யாருக்காவது இந்த மாத்து யோசனை தோணுமா?)
திடீரென ஹீரோயினுக்கு ஆஸ்திரேலியா போய் படிக்க வேண்டும் என நினைப்பு வர, அதற்கு இரண்டு லட்சம் புரட்ட பெண்ணைக் கடத்துகிறார்கள். கடத்தப்பட்ட பெண் வயசுக்கு வந்துவிட, கடத்தலை மறந்து அவளுக்கு சடங்கு செய்து கும்மியடித்து பாட்டுப் பாடுகிறார்கள்… (இருக்கிற இத்தனூண்டு மூளைய வச்சிக்கிட்டு இதுக்குமேல எப்படி மாத்தி யோசிக்கிறது!)
அப்புறம் போலீஸ் ஆபீஸரிடம் மாட்டுகிறார்கள். அவருக்காக ஒரு ரவுடியைக் கொல்கிறார்கள்… அந்த ரவுடியின் ஆட்கள் இவர்களைக் கொல்கிறார்கள். ஹீரோயின் அம்போவென நிற்க, படம் பார்க்க வந்தவர்கள் அய்யோ என தலையிலடித்துக் கொண்டு துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடுகிறார்கள்.
சுப்பிரமணியபுரம், ரேணிகுண்டாவை அப்படியே எடுப்பதா, மாத்தி எடுப்பதா என மாத்தி மாத்தி யோசித்திருப்பார் போலிருக்கிறது நந்தா பெரியசாமி. இதுக்கு சசிகுமார் தரும் அறிமுக உரை வேற!
இந்தப் படத்துக்கு இப்படியொரு தலைப்பை வைத்ததற்கே இந்த இயக்குநருக்கு, படத்தில் வரும் ‘சாதி போலீசுக்கு’ தரும் தண்டனையைத் தர வேண்டும். போயும் போயும் இவரை நம்பி சவாலெல்லாம் விட்டார் அமீர், படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில்!
இன்னொரு வாட்டி தியேட்டர் பக்கம் வருவியா என்று கூப்பிட்டு செவிட்டில் அறைவது போன்ற கொடுமை… திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு, நடிகர்கள், மகா கேவலமான இசை என எல்லாமே இப்படி படு சொதப்பலாக இருந்ததை இத்தனை வருட சினிமா அனுபவத்தில் நான் பார்த்ததில்லை!
இதுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல ஒரு காட்சி க்ளைமாக்ஸில்… தனக்கு முன் பின் தெரியாத நான்கு பையன்களில் மூவரை வில்லன் போட்டுத் தள்ளுகிறான். ஒருத்தன் மட்டும் மிஞ்ச அவனிடம் வில்லன் பேசும் வசனம், ‘இனி எப்படிடா நீ அத்திலி புத்திலி ஆடுவேன்னு பாக்கறேன்’!
‘நிக்காதீங்க ஓடிப்போயிடுங்க… அந்த கொடிய மிருகம் நம்மை நோக்கி வருது’ என்று அலறிக் கொண்டே எழுந்தார் உடன் படம் பார்த்த நண்பர். அதற்கு சரியான அர்த்தம் இந்தப் படத்தில்தான் புரிந்தது!!
Rating – 1.5/10
- Envazhi
super ma poduthaku
Good review