அந்நியன், உன்னாலே உன்னாலே படங்களுக்குப் பிறகு…
ஜெயம் படத்தில் அறிமுகமாகி தமிழ் தெலுங்கு இந்தி என பரபரப்பாக வலம் வந்த சதா, இடையில் தமிழ்ப்பட வாய்ப்புகளைத் தவிர்த்து வந்தார்.
இடையில் அவர் அளித்த பேட்டிகளில் கூட, தமிழில் நல்ல பாத்திரங்கள் அமைந்தால் மட்டுமே நடிப்பேன் என்பதில் உறுதியாக இருந்தார்.
தற்போது பி வாசு இயக்கத்தில், ஆர்கே நாயகனாக நடிக்க பரபரப்பாக உருவாகிவரும் புலிவேஷம் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.
சந்திரமுகி, குசேலன் ஆகிய பரபரப்பான வெற்றிப் படங்களுக்குப் பிறகு பி வாசு தமிழில் இயக்கும் படம் புலிவேஷம். இடையில் கன்னடத்தில் அவர் இயக்கிய ஆப்தரக்ஷகா சக்கைப்போடு போடுவது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் அவன் செயல், அழகர் மலை ஆகிய வெற்றி ரேஸுக்குப் பிறகு தயாரித்து கதாநாயகனாக புலிவேஷத்தில் நடிக்கிறார் ஆர்கே.
புலிவேஷத்தில் கிராமத்துக்கும் நகரத்துக்கும் என இரண்டு கதாநாயகிகள்.
இதில் கிராமத்துக்கென கேரளாவிலிருந்து திவ்யா விஸ்வநாத் என்ற அழகுக் கிளி அறிமுகமாகிறார். நகரத்து நாயகி வேடத்தில் சதா நடிக்கிறார்.
படத்தில் சதாவின் கதாபாத்திரம் மகா மர்மமான முறையிலும், நடிப்புக்குத் தீனி போடும் விதத்திலும் ஆக்ஷன் கலந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி என வேறு ரேஞ்சுக்குப் போய்விட்ட சதாவை, மீண்டும் தமிழுக்கு இழுத்தது இந்த வித்தியாசமான பாத்திரம்தான்.
இதுபற்றி சதா கூறுகையில், “அந்நியன், உன்னாலே உன்னாலே படங்களுக்குப் பிறகு நான் எடுத்துக் கொண்ட காலகட்டம் அதிகம் என்றாலும், நடித்தால் சிறந்த கேரக்டரில் நடிப்பது… இல்லாவிட்டால் நடிக்காமலேயே இருந்துவிடுவது என்ற முடிவில் இருந்தேன். இந்தப் படங்களுக்குப் பிறகு இடைவெளி சற்று அதிகமாகிவிட்டது.
இந்த 4 வருட இடைவெளியில் இரண்டு இந்திப் படங்கள் முடித்துவிட்டேன். தமிழில் நிறைய வாய்ப்புகள் வந்தும் கதாபாத்திரங்கள் சரி இல்லாததால் மறுத்து வந்திருக்கிறேன்.
வாசு சார் இதற்கு முன் இரு படங்களில் நடிக்கக் கேட்டும் சந்தரே்ப்ப சூழ்நிலையால் என்னால் நடிக்க முடியாமல் போனது. அந்தக் குறையும் இந்தப் படம் மூலம் நீங்கிவிட்டது.
விரைவில் புலிவேஷத்துடன் என்னைப் பார்க்கலாம்…”, என்றார் சதா.