
(கருணாநிதிக்கு விருப்பமான) ஒரு நாடகமன்றோ நடக்குது!
கடந்த சனிக்கிழமையன்று பிலிம்சேம்பர் வளாகத்தில் நடந்த, சினிமாக்காரர்களின் அனைத்து சங்க பிரதிநிதிகள் பங்கேற்ற, சமரச முயற்சி என்ற பெயரில் அரங்கேறிய பழிவாங்கல் படலத்தை இப்படித்தான் வர்ணித்தார் நமது சக பத்திரிகை நண்பர் ஒருவர்.
அதுதான் உண்மையும்கூட என்கிறார்கள் நாம் விசாரித்த வகையில்.
ஒரு பொது மேடையில் தன்னை வைத்துக் கொண்டே அவமானப்படுத்திவிட்டார்களே என்ற கருணாநிதியின் தனிப்பட்ட கோபமே இத்தனை பரபரப்புகளாக அரங்கேறி வருவதாகக் கூறப்படுவதில் எக்கச்சக்கமான உண்மைகள் ஒளிந்துள்ளன.
இதில் எந்த அளவு உண்மை உள்ளது என்று ஆராய விரும்புபவர்கள், முதலில் பார்க்க வேண்டியது கருணாநிதி விடுத்த ஒரு அறிக்கையை.
‘தானே கேட்டு தானே பதிலும் சொல்லிக் கொள்ளும்’ பாணியிலான அவரது இந்த அறிக்கை வெளிவந்தது, அஜீத்தின் பேச்சு அரங்கேறியதற்கு அடுத்த நாள். எத்தனைப்பேர் இந்த அறிக்கையைப் படித்திருப்பார்கள் என்று தெரியவில்லை.
அதில், “…இந்திரனே, சந்திரனே என்றெல்லாம் புகழ்ந்து, உங்களைத் தூக்கி நிறுத்துபவர்கள், அதே வேகத்தில் உங்களை கீழே தூக்கிப் போடுபவர்களாகவும் இருப்பர்….
…இல்லையேல், எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருந்தாலும், எச்சமிடும் பறவைகளை துரத்தவும் முடியாமல், தூக்கி வைத்துக் கொள்ளவும் முடியாமல் தவிக்கும், கோபுரக் கலசத்தின் நிலைதான் ஏற்படும்…” என்று குறிப்பிட்டிருப்பார். நடிகர்களை தன் மீது எச்சமிடும் காக்கைக் கூட்டம் என்று சொல்லாமல் சொல்லியிருப்பார் கருணாநிதி (இவர் கோபுரமாம்!).
-மனதில் எந்த அளவு வன்மம் இருந்தால் 90-ஐ நெருங்கும் ஒரு முதியவரிடமிருந்து இந்த வார்த்தைகள் வந்திருக்கும் என்பதை யோசிக்க வேண்டும்.
அந்த வன்மத்தின் அடுத்த பரிமாணம்தான் ஸ்டன்ட் பார்ட்டிகளின் வன்முறை, குகநாதன்களின் கோபாவேச மிரட்டல், நடிகர் சங்கத்தின் ஊமை விஷமம், பன்னி செல்வம்களின் பிளாக்மெயில், நாடார் சங்கம்களின் கண்டனங்கள், ‘குறு’மாவளவன்களின் குறுக்குசால் அறிக்கை….. என்று நீண்டு, ராமநாராயணன் தலைமையிலான கசாப்புக் கூட்டமாக முடிந்திருக்கிறது (தற்காலிகமாக) என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.
இவ்வளவு கடுப்புடன் பேசும் கருணாநிதி ஒன்றை மட்டும் வசதியாக மறந்துவிடுகிறார்… பறவைகளை எப்போதாவது ஒருமுறை தன்னருகில் வரவழைத்தால் பிரச்சினையில்லை. அருகே பரஸ்பர ஆசையாய் பார்த்து, கொஞ்சி குலாவி உடனே அனுப்பி வைத்துவிடலாம். சதா சர்வகாலம் தலையைச் சுற்றி பறக்க வைத்துக் கொண்டே இருந்தால் அந்த பறவைகள் எச்சத்தை எங்கே போடும்… தலை மீதுதானே!
ஆனால் பாருங்கள்… இப்படி அறிக்கை விட்டும் அவரது கோபம் அடங்கவில்லை. ஒரு பக்கம் சிரித்துக் கொண்டே, இன்னொரு பக்கம், மேடையில் அவமரியாதை செய்துவிட்ட அஜீத்தை வறுத்தெடுக்கும் வேலைகளைத் துவங்கிவிட்டதாக விவரமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
இதைப் புரிந்து கொண்டு, அஜீத்தைக் காப்பாற்ற ஒரே ஒரு நல்ல ஆத்மா விரும்பியது. அதற்கான முயற்சிகளையும் செய்தது… அவர்தான் சூப்பர் ஸ்டார் ரஜினி. இதுபோன்ற பல காயங்களைக் கண்டவர், அவற்றிலிருந்து யாருடைய தயவுமின்றி தாமாகவே மீண்டவர் அவர்.
அவரது முயற்சியின் விளைவாக, தன்னைப் பார்த்து மரியாதை செய்து, விளக்கம் தர வந்த அஜீத்தை முதல்வர் கருணாநிதி நடத்திய விதம் குறித்து ஜூனியர் விகடன் இப்படிக் குறிப்பிட்டுள்ளது:
“அஜீத்தின் கார் கோபாலபுரம் தெரு முனையில் நிறுத்தப்பட்டது. அங்கிருந்து நடந்தே வரவழைக்கப்பட்ட அஜீத்துக்கு மெட்டல் டிடெக்டர் சோதனை நடத்திய பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டார்.
மிக கூலான மனோபாவத்தில் முதல்வரை எதிர்பார்த்துச் சென்ற அஜீத்துக்கு எடுத்த எடுப்பிலேயே ஷாக்காம்! கையோடு கொண்டு போயிருந்த சால்வையை முதல்வருக்குப் போர்த்தினார். குனிந்து காலைத் தொட்டு வணங்கினார்.
‘உட்காருப்பா’ என்றாராம் முதல்வர் கரகரத்த குரலில். ஸீட்டின் நுனியில் அமர்ந்து, ‘ஐயா, அன்னிக்கு மேடையில் நான் சில கருத்துகளை பேசிட்டேன்…’ என்று அஜீத் சொல்ல ஆரம்பிக்க… பளீரென்று குறுக்கிட்டாராம் முதல்வர். ‘ஏம்ப்பா… ஆமா, யார் மேலே இருக்கிற கோபத்திலே அப்படிப் பேசினே? இப்ப என்ன சொல்றதுக்காக வந்திருக்கே? யாரோ பேசின விஷயத்துக்கு, தனிமனிதப் பிரச்னைக்கு நீ எப்படி மேடையில் பதில் கேட்கலாம்? சொல்லுப்பா..!’ என்று உக்கிரம் கலந்த குரலில் வெளிப்பட்டதாம் முதல்வரின் வார்த்தைகள்!”

-இந்த சந்திப்பு, இதில் அஜீத் காலில் விழுந்த விதம் எதிலுமே முதல்வருக்கு திருப்தியில்லையாம். காரணம் அதற்கு சிறிது நேரத்துக்கு முன்புதான் அஜீத்தைப் பாராட்டி பளிச்சென்று பேட்டி கொடுத்துவிட்டுப் போயிருந்தார் ரஜினி.
இந்த இரு சந்திப்புகளும் முடிந்த பிறகும், தன்னை விட இந்த இரு நடிகர்களும் அதிகமாய் முன்னிலைப் படுத்தப்படுவதை உணர்ந்துவிட்டாரோ என்னமோ.. ஸ்கிரிப்டை வேகவேகமாக முடித்து அதை இயக்கும் வேலையை ராமநாராயணனுக்கு கொடுக்க, அவர் சில மணி நேரங்களில் அனைத்து சங்கங்களின் பிரதிநிதிகளையும் அழைத்தார். அவர் நல்ல மனிதர்தான். ஆனால் அவருக்கு எஜமானர் அப்படியில்லையே. எனவே தனக்களிக்கப்பட்ட கசாப்புக்கடைக்காரர் வேலையை கச்சிதமாகச் செய்தார் ராமநாராயணன்.
இதில் கொடுமை என்னவென்றால்… கூட்டத்தில் ஒரு பிரதிநிதியாக தியேட்டர்காரர் பன்னி செல்வம் வந்ததுதான். நடப்பது நடிகர்களின் பிரச்சினை. அதில் ‘இதுக்கு’ என்ன வேலை?
இருக்கிறது… அதாவது இவருக்கும் தயாரிப்பாளர் சங்கத்தினருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் மாட்ச் ஒளிபரப்புவதில் பெரும் தகராறு. அந்த தகராறை நேர்மையாகத் தீர்த்துக் கொள்ளத் துப்பில்லாத இவர்கள், அஜீத்தை பகடைக் காயாகப் பயன்படுத்திக் கொண்டனர் என்பதே உண்மை. அஜீத்துக்கு தண்டனை கொடுத்துவிட்டதால் ஐபிஎல் ஒளிபரப்பு விவகாரம் முடிந்துவிட்டதா? இல்லை… ஆனாலும் அன்றைய அரிப்புக்கு மருந்து கிடைத்துவிட்டதே.. அந்த திருப்திதான் அவருக்கு!
இந்த சமரச படலம் எனும் கலைஞரின் புதிய படத்தில் ராம நாராயணன் தனது இயக்குநர் பொறுப்பை செவ்வனே செய்தார். கூடவே விளக்குப் பிடிக்கும்.. ஸாரி… தண்டனை விளக்கப் பொறுப்பை மேற்கொண்ட குகநாதன் தனக்கு தெரிந்த அநியாயத்தை தீர்மானமாக அரங்கேற்ற, ராதாரவி என்ற சந்தர்ப்பவாதி கையொப்பமிட, க்ளைமாக்ஸை முடித்து வைத்தார்கள்!

அடுத்து இன்னொரு பாராட்டு விழாவுக்கு ஸ்க்ரிப்ட் ரெடி பண்ண வேண்டியிருக்கும்… ‘தானே முயன்று பிரச்சினைகளைத் தீர்த்த தானைத் தலைவனுக்கு பாராட்டு விழா’ என்ற தலைப்பில். அதற்கும் ரஜினி தயவு கட்டாயம் தேவைப்படும். இப்போதேனும் தன் சிங்க முகத்தை ரஜினி காட்டவேண்டும் என்பதே நடக்கிற அநியாயத்தைப் பார்த்து நொந்துபோயிருக்கும் அவரது அன்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
உண்மையில், இந்த சங்க நிர்வாகிகள் எனும் வெட்டி ஆபீஸர்கள் எல்லோருமே வேலையின்றி சும்மா இருக்கிறவர்கள்… சாதித்த மனிதர்களை சந்திக்கு இழுப்பதில் கைதேர்ந்த திண்ணைப் பேச்சாளர்கள்… நல்ல மனிதர்களை அவமானப்படுத்திய நிறைவோடு மீண்டும் காலித் திண்ணைக்குத் திரும்புகிறார்கள் தற்காலிகமாக.
இந்த திண்ணைகள் மீண்டும் காலியாகும், நல்லவர்களை பலிகொள்ளும் கட்டப் பஞ்சாயத்து வேலை வரும்போது!
(Temporary) சுபம்!!
-வினோ
If you would like to make a comment, please fill out the form below.
very good cover story, I like that!